புதன், 24 ஆகஸ்ட், 2011

யுவன் ஆல்பம்


உலகமெல்லாம் உனதல்லவா
உன் இதயம் மட்டும் எனதல்லவா
தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம்
தனிமையினை துரத்தி விட்டு இனிமையை தாழ்திறப்போம்
சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்
i’ll be there for you  i’ll be there for you
i’ll be there for you  i’ll be there for you

ஹே நட்சத்திரத்தில் பூ பறிப்போம்
வா நம்பிக்கையுடன் துள்ளிக் குதிப்போம்
நினைத்தபடி நீ வாழவும்
உன்னை மறந்து நீ ஆடவும்
i’ll be there for you  i’ll be there for you
i’ll be there for you  i’ll be there for you

இரவு என்ன பகலும் என்ன இசை மழை தூவட்டும்
இசை அலையில் மிதந்தபடி இதயங்கள் நனையட்டும்
நனையட்டும் நனையட்டும் நனையட்டும்………..
சிரிக்கின்ற போதிலும் நீ அழுகின்ற போதிலும்
வழித்துணை போலவே நான் இசையுடன் தோன்றுவேன்
i’ll be there for you  i’ll be there for you
i’ll be there for you  i’ll be there for you

வரிகள்- நா.முத்துகுமார்...

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

செழியனும் விகடனும்


'முதன்முதலில் விகடனை நான் அம்மாவின் கைப்பையில் பார்த்தேன் என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு ஆறு, ஏழு வயது இருக்கும். ஆ..ன...ந்...த வி...க...ட...ன் என்ற எழுத்துக்களுக்கு அருகில் தலையில் கொம்புடன் சிரிக்கிற அந்த விகடன் தாத்தா படத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஆச்சர்யம். அந்த வயதில் விநோதமாகத் தெரிந்த 'விகடன்என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாது. தாத்தாவுக்கு ஏன் கொம்பு என்பதும் புரிய வில்லை. ஆனால், பிடித்திருந்தது.

அப்போது நாட்டரசன்கோட்டை என்கிற சிற்றூரில் அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்களாக இருந்தார்கள். வெளியூரில் பத்தாவது வரை படித்துவிட்டு, கோடை விடுமுறைக்கு நாட்டரசன்கோட்டை வந்தேன். அப்போது பாலிடெக்னிக்கில் படிக்க விரும்பினேன். அஞ்சலகம் ஊரின் இன்னொரு மூலையில் இருந்தது. தபால்காரர் வரும் வரையில் காத்திருக்க முடியாது. கட்டு பிரிக்கும்போதே விண்ணப்பத்தை வாங்க வேண்டும் என்பதற்காக, காலையில் 10 மணிக்கே அஞ்சலகம் சென்று காத்துஇருந்தேன். 10 மணிக் கட்டில் தபால் இல்லை. அடுத்த கட்டு சிவகங்கையில் இருந்து வரும் 12 மணி பஸ்ஸில் வரும். இடையில் இரண்டு மணி நேரம் என்ன செய்வது?


நாயம்மா குளக்கரையில் காத்திருக்கலாம். அந்த எரிக்கும் வெயிலில் மனித நடமாட்டமே இருக்காது. வழக்கு மொழியில் சொல்வது என்றால், ஒரு சுடுகுஞ்சுகூட இருக்காது. அப்போதுதான் எதிரில் 'பாரதி வாசக சாலைஎன்று நீலப் பின்னணியில் வெள்ளை எழுத்துகள் அச்சடிக்கப்பட்ட பலகை இருந்தது. அந்த சுற்றுச்சுவரின் மூலையில் முதல் மாடியில் ஓடுகள் வேயப்பட்ட அந்த வாசக சாலை இருந்தது.

படிகளில் ஏறி மாடிக்கு வந்தேன். உள்ளே ஒரு பெரியவர் மட்டும் ஏதோ படித்துக்கொண்டு இருந்தார். சுவரின் இரு பக்கமும் தரையில் உட்காரும் வகையில் பந்திப் பாய் விரித்து, அதன் மேல் புத்தகங் கள் வைக்கப்பட்டு இருந்தன. அவை காற்றில் பறந்துவிடாமல் இருக்க, அதன் மேல் மரத் துண்டுகள். உள்ளே நுழைந்தேன். மரத் துண்டுகளை மீறி பத்திரிகையின் நுனி காற்றில் படபடத்துக்கொண்டு இருந் தது. எடுத்துப் பார்த்தேன். ஓர் ஆன்மிக மலர். நகர்ந்து உட்கார்ந்து, அடுத்த இதழை எடுத்தேன். 
கொம்புவைத்த தாத்தா 10 வருடங்களுக்குப் பிறகு என்னைப் பார்த்தார். அதே பழகிய சிரிப்பு!

அந்த வயதில் திரும்பவும் அறிமுகமான விகடனில் எனக்குப் பிடித்தவை எல்லாம் நகைச்சுவைத் துணுக்குகள். விண்ணப்பம் வந்து காரைக்குடி கல்லூரியில் சேர்ந்தேன். விடுதியில் 'அருவை தங்கராஜ்என்ற நண்பன் இருந்தான். வருகிற வாரப் பத்திரிகைகள் எல்லாம் வாங்கி, வாசகர் கடிதம் எழுதுவான். அவன் அறைக்குப் போனால், எல்லா இதழ்களும் படிக்கலாம். பக்கத்து அறையில் செல்வ பாண்டியன் என்ற நண்பன் இருந்தான். விகடனில் மணியம் செல்வன் வரைகிற பெண்களை அப்படியே வரைந்து காட்டுவான். எனக்கும் வரையத் தெரியும் என்பதால், நானும் அவனும் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்தோம். விகடன்தான் மாதிரி.


அந்தப் பருவத்தில் விகடனின் சினிமா விமர்சனம் பிடிக்கும். காரைக்குடியில் ஒரு படம் வெளியாகிற அன்றே பார்த்துவிட்டு, அதன் குறை, நிறைகளை யோசித்து மனதுக்குள் மதிப்பெண் போட்டு விகடன் விமர்சனம் வந்ததும் அதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது ஓர் இனிமையான பயிற்சியாக இருந்தது. அப்போது விகடன் மாணவர் நிருபர் திட்டத்துக்கு விண்ணப்பித்தேன். ஆனால், கிடைக்கவில்லை.

கல்லூரி முடிந்து திரும்பவும் நாட்டரசன்கோட்டை. அப்போது எங்கள் வீட்டுக்கு அருகிலேயே செங்கமலத்தான் தெருவில் நூலகம் இருந்தது. 8 மணிக்கு நூலகம் திறக்கும். வெள்ளிக்கிழமை ஆனதும் திறக்கும்போதே நுழைந்தால்தான், விகடன் கிடைக்கும். கொஞ்சம் தாமதமாக உள்ளே நுழைந்தால், அவ்வளவுதான். சன்னமாக பழைய தமிழ்ப் பாடல்களை விசிலடித்துக்கொண்டே கையைப் பின்னால் கட்டிக்கொண்டு இங்கும் அங்கும் நடக்கிற நூலகர், 'என்ன தம்பி விகடனா?மதியம்தான்!என்று நக்கலாகச் சிரிப்பார். பார்த்தால், ஆம்பிளைச் சட்டை போட்டு நீளப் பாவாடை அணிந்த என் வயதுப் பெண் ஒருத்தி, வரிவிடாமல் விகடன் படித்துக்கொண்டு இருப்பாள். இடையிடையே முகட்டைப் பார்த்து யோசிப்பாள். திரும்பவும் படிப்பாள். நகம் கடிப்பாள். அவள் படித்து முடித்ததும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் வருவார்கள். வணக்கம் சொல்லி விடைபெற்று, மறு நாள் தான் விகடன் படிக்க முடியும்.

ஒவ்வொரு வாரமும் நான் தோற்றுக்கொண்டே இருந்தேன். ஒருநாள் நான் முன்பே சென்று விகடனைக் கைப்பற்றினேன். அந்தப் பெண் வந்தாள். அவசர மாகக் கையெழுத்தைக் கிறுக்கி விட்டு, பத்திரிகைகள் கிடைக் கும் மேசைக்கு வந்து வேகமாகத் தேடினாள். நான் விகடனை நடு மேசையில் ஒரு செய்தித்தாளை வைத்து மூடி வைத்து இருந்தேன். அவள் பரபரப்பாகத் தேடுகிற கணத்தில், செய்தித்தாளை எடுத்தேன். பார்த்ததும் பாய்ந்து அவள் எடுக்க, நானும் எடுக்க, இருவர் கையிலும் விகடன். அவள் முகத்தில் அப்படி ஒரு கோபம். நான் விட்டுக்கொடுத்தேன். அவள் முகத்தில் இருந்த மொத்தக் கோபமும் புன்னகையாக மாறிய தருணம். தம்...தன...னம்...தன...

வேலைக்குப் போக விரும்பாமல், கவிதைகள், கதைகள் எழுதத் துவங்கி இருந்தேன். விடாமல் சினிமா பார்த்துக்கொண்டு இருந்தேன். விகடனுக்கு அனுப்பிய எதுவும் பிரசுரமாகவில்லை. எல்லாம் 'ஏ...பெண்ணே...அல்லது. 'ஓ... நிலவே...என்று மூன்று புள்ளிகள் கண்டிப்பாக இருக்கும் புதுக் கவிதைகள். செட்டிநாட்டில் மணமக்களை வாழ்த்திக் கவிதை எழுதி, அதை அச்சிட்டு திருமண வீட்டில் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. அதற்கு கலி விருத்தம், ஆசிரிய விருத்தம் எல்லாம் எழுதித் தருவேன். 'வாழ்த்துப்பா ஆக்கம்என்று பெயர் போட்டு, 1,000 பிரதிகள் அச்சிடுவார்கள். அச்சில் என் பெயரைப் பார்க்க அது ஒன்றுதான் வாய்ப்பு. ஒருமுறை நானும் அம்மாவும் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தோம். அருகில் வந்த பெண், 'டீச்சர்... மூத்தவன்தானே. எங்க வேலை பாக்குறான்?’ உடனே அருகில் இருந்த பெரியவர், 'இவனா? கவிதை எழுதுறான்... ஹஹ்...என்று சிரித்தார். அன்று வீடு திரும்பும் வரை அம்மா பேசவே இல்லை. இரவு சாப்பிட்ட பிறகு, 'அம்மா சொல்றேன்னு கோபப்படாத... இதெல்லாம் வேலைக்குப் போயிட்டே செய்யலாமேப்பாஎன்று சொல்கையில், அம்மா வின் கண்கள் கலங்கி இருந்தன. ஒரு முறை விகடனில் பெயர் வந்தால், எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பினேன்.

இதற்கிடையில் 'அன்னம்கதிரின் நட்பினால், தீவிர இலக்கியம், கோணங்கி கொண்டுவந்த 'பதேர் பாஞ்சாலி’, மதுரை நண்பர்கள் திரையிட்ட 'பை சைக்கிள் தீவ்ஸ்’, தூர்தர்ஷனில் மதிய நேரத்தில் வருகிற விருதுப் படங்கள் பார்க்கத் துவங்கி இருந்தேன். வாய்ப்பு தேடி சென்னை வந்த நாட்களில் ஃபிலிம் சேம்பரில் நல்ல படங்கள் பார்த்துக்கொண்டு இருந்தேன். சிறு பத்திரிகைகளில் எழுதத் துவங்கி இருந்தேன். எனது ஆசிரியர் பி.சி.ஸ்ரீராமிடம்  உதவியாளனாகச் சேர்ந்தேன்.

அப்போது என்னைப் பார்க்க வந்த பழைய நண்பர் ஒருவர், 'என்னடா கதையெல்லாம் எழுதுறியாம்... சொல்றாய்ங்க... எதுல எழுதுற?’ என்றார். 'சிறுபத்திரிகையில...என்றதும் சிரித்தார். 'அது நம்ம ஊர் பஸ் ஸ்டாண்டுல கெடைக்குமா?’, 'இல்ல’, 'பின்ன... நீயே எழுதி, நீயே படிப்பியா? விகடன் மாதிரி பெரிய பத்திரிகைல எழுதுடா...என்றார்.

எழுதலாம் என உத்தேசித்து, ஒரு கதை எழுதி அனுப்பினேன். அப்போது எனது திருமணம் நிச்சயமான சமயம். கதை பிரசுரத்துக்குத் தேர்வானதாகக் கடிதம் வந்தது. வருங்கால மனைவி பிரேமாவிடம் பெருமையாகச் சொன்னேன். 'எப்ப வரும்?’ 'சீக்கிரம் வந்திரும்...பிரேமா அன்று முதல் தொடர்ச்சியாக விகடன் வாங்கி, 'அவரே எழுதுன கதை விகடன்ல வருதாம்...என்று எல்லோரிடமும் பெருமை பேசி, கதை பிரசுரமானபோது... எங்கள் பையனுக்கு ஒரு வயது.

பி.சி.ஸ்ரீராம் சாரிடம் உதவியாளனாக இருக்கும்போது அவருக்குக் கடிதங்கள் எழுதி இருக்கிறேன். ஆனால், பத்திரிகைகளில் எழுதுகிற விஷயம் அவருக்குத் தெரியாது. அப்போது நண்பர் அருள் எழிலன் 'விகடன் காதல் சிறப்பிதழ்க்காக என்னிடம் சிறுசிறு கவிதைகள் கேட்டார். கொடுத்தேன். அடுத்த வாரமே விகடனில் வந்தது. அந்தக் கவிதைகளை இதழ் முழுக்கப் போட்டு கடைசிப் பக்கத்தில்தான், எழுதிய என் பெயர் இருந்தது. அன்று அலுவலகம் போனதும் பி.சி. சார் என்னை அழைத்து 'விகடன் பார்த்தேன்... கவிதையில நல்ல விஷ§வல் சென்ஸ் இருக்கே. யாரு எழுதி இருப்பா... நீயா இருக்கும்னு நினைச்சேன்.. பார்த்தா, நீயேதான்என்றார். 'எழுத்தோட வலிமையை ஃபிரேம்ல கொண்டு வர்றதுதான் சவால்... அது... உன்னால முடியும்என்றார். பெருமையாக இருந்தது.

எனது சிறுகதைக்கு 'கதாவிருது வாங்கியதும் இரண்டு பக்கங்களில் எனது படத்துடன் செய்தி விகடனில் வந்தது. பிறகு, விகடனின் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் அவர் களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் ஆவணப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பு தற்செயலாக அமைந்தது. அதற்காக மும்பை சென்று இருந்தோம். இயக்குநர் ராமனந்த சாகர், நடிகர் அசோக் குமார் இருவரும் 'விகடன்என்று சொன் னதும் எழுந்து நின்று எங்களை வணங்கி மரியாதை செய்தது மறக்க முடியாத அனுபவம். விகடன் ஒரு மாபெரும் நிறுவனமாக வளர்ந்ததையும், 'பாஸ்என்று எல்லோரும் அழைக்கிற திரு.வாசன் அவர்களின் ஆளுமையையும் உடன் இருந்து பணிபுரிந்த அவர்கள் சொல்கையில் பிரமிப்பாக இருந்தது.

அவ்வளவு பெருமைக்குரிய விகடனில் இருந்து ஒருநாள் ரா.கண்ணன் அழைத்தார். ஒரு காதல் கவிதைத் தொடர் எழுதும்படி கேட்டார். 'சினிமாவைப் பற்றி எதாவது எழுதலாமேஎன்றேன். 'இதையே சினிமாவை மாதிரி எழுதுங்க பாஸ்என்றார். அதாவது, 'எழுதும் விஷயத்துக்குப் படமும் நீங்களே எடுக்க வேண்டும்என்றார். இந்த சுவாரஸ்யமான சவால்தான் வெற்றிகரமான 'வந்த நாள் முதல்...தொடராக வந்தது. நான் சொன்னதை நினைவில்வைத்து, தொடர்ந்து திரும்பவும் கண்ணன் அழைத்தார். நான் நேசிக்கிற உலகத்தின் சிறந்த திரைப்படங்களைப் பற்றி எழுதும் வாய்ப்பு வந்தது.
'
உலக சினிமாதொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் வெளியானது. ஒரு திரைப்படக் கல்லூரி தர முடியாத மிகத் தீவிரமான பயிற்சியை இந்தத் தொடர் மூலம் விகடன் எனக்கு வழங்கியது. இன்றைக்குக் கிராமங்களில் இருக்கிறவர்களுக்குக்கூட உலக சினிமா அறிமுகமாகி இருக்கிறது. நல்ல சினிமாவை அறிமுகப்படுத்துவதன் வழியாக திரைப்பட ரசனையில் முக்கிய மான மாற்றத்தினை இந்தத் தொடர் மூலம் விகடன் நிகழ்த்தியது. அத்தகைய முயற்சியில் நானும் இருந்திருக்கிறேன் என்பதே பெருமை. ஒரு முறை எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உலக சினிமாபற்றி என்னிடம் சொல்கையில், 'நிலைகுத்தி இருந்த தேரை ஒத்த ஆளா கட்டி இழுத்திட்டியே...என்றார். அதற்கு விகடன் தந்த சுதந்திரம்தான் முக்கியமானது.

இதுபோல எந்தப் பின்னணியும் இல்லாமல், சென்னை வந்த என்னைப் போல பல இளைஞர்களின் தகுதியையும் திறமையையும் சரியாகக் கணித்து, வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதுதான் இன்றைக்கும் விகடனின் சிறப்பாக இருக்கிறது. இப்போதும் ஒளிப்பதிவாளராக நான் பணிபுரிகிற படங்களின் விமர்சனம் வரும்போது, விகடன் என்ன எழுதும் என்று ஆர்வமாகக் காத்திருப்பேன். எப்போதும் அண்ணா சாலையில் விகடன் அலுவலகத்தைக் கடந்து செல்கையில்,  சொந்த வீட்டைக் கடந்து செல்கிற உணர்வே எனக்குள் ஏற்படுகிறது.

ஒரு திரைப்பட மாணவனாக விகடனிடம் இருந்து எப்போதும் நான் கற்றுக் கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு தரமான வணிகத் திரைப்படம்போல எல்லோரையும் கவர்ந்திழுக்கிற தன்மை விகடனிடம் இருக்கிறது. ஈழப் பிரச்னை குறித்த கட்டுரை கண் கலங்கவைக்கும்; ஒரு சிறுகதை ஈர்க்கும். ஒரு துணுக்கு சிரிக்கவைக்கும். ஒரு திரைப்படத்தின் எடிட்டிங் உத்திபோல சுவாரஸ்யம் குறையாமல் எல்லாப் பக்கங்களையும் படிக்கவைக்கிற, கடைசிப் பக்கத்தில் இருந்து புரட்டினாலும் சுவாரஸ்யம் குறையாத தந்திரம் எது என்று தேடிக்கொண்டே இருக்கிறேன்.

சென்ற வருடம் புத்தகக் காட்சிக்கு நானும் எனது மகன் சிபி நந்தனும் சென்றிருந்தோம். இரண்டாவது படிக்கும் அவனுக்கு தமிழ் வாசிக்க நான் கற்றுக் கொடுத்த சமயம் அது.  புத்தகக் காட்சியில் என்னைப் பார்த்ததும் சிலர் கை கொடுத் தார்கள். ஒரு கல்லூரி மாணவி ஓடி வந்து உலக சினிமா புத்தகத்தில் கையெழுத்து வாங்கினார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சிபிக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. 'அடப்பாவி... நீ வி.ஐ.பி. ஆயிட்டியா... எப்டி?’ என்று கேட்டான். சிரித்துக்கொண்டே, நான் விகடன் ஸ்டாலைக் காட்டினேன்.
'
வி...க...டா... ஆ...இன்... விக...டான்...
'
டான் இல்லப்பா... டன்...
'
அப்பா... அது ஏன் அந்த தாத்தாவுக்கு கொம்பு இருக்கு?’
விகடனின் வசீகரம் தலைமுறை கடந்தும் தொடர்கிறது. தொடரும்!''

சனி, 13 ஆகஸ்ட், 2011

ட்ரெடில்-ஜெயகாந்தன்



டிரிங்...டிரிங்...டிங்...
 மை பிளேட் சுற்றுகிறது
மை ரோலர்கள் மேலும் கீழும் ஓடுகின்றன
டங் - டட்டங்க்!
இம்ப்ரஷன்!
டடக்... டடக்... டடக்... டடக்...
 மூங்கில் குச்சி போன்ற ஒரு கால் பெடலை மிதிக்கிறது. ஆம்  அந்த இயந்திரத்தின் உயிர் அதில்தான் இருக்கிறது!

இந்தச் சப்தமேள சம்மேளத்தின் அர்த்தம்? - இருண்ட குகை போன்ற அந்தச் சிறிய அச்சுக்கூடம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான்!

அந்த அச்சுக்கூடத்திற்கு வயசு இருபதுக்குமேல் ஆகிறது. அங்கே நடக்கிற சராசரி வேலை கலியாணப் பத்திரிகைதான். சமயா சமயங்களில் பில் புக்குகள், லெட்டர் பேடுகள், விஸிட்டிங் கார்டுகள் இத்யாதி வேலைகளும் இடம் பெறும். அங்கிருப்பதெல்லாம் அந்த 'டிரெடி'லைத் தவிர நாலைந்து ஜாப் டைப்கேஸ்களும் ஒரு சிறிய கட்டிங் மிஷினும்தான்! - சின்ன பிரஸ்தானே? அப்படி என்ன பிரமாத லாபம் கிடைத்துவிடப் போகிறது?

ஆனால் பிரஸ்ஸின் முதலாளியான முருகேச முதலியார் மட்டும் இருபது வருஷங்களூக்குப் பின் எப்படியோ தமக்கென்று ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு விட்டார்.

கம்பாஸிட்டர் + பைண்டர் + மெஷின்மேன் எல்லாம் - அதோ, டிரெடிலின் அருகே நின்று 'வதக் வதக்'கென்று காலை உதைத்துக் கொள்ளுகிறானே, வினாயகமூர்த்தி - அவன்தான்!

மாதம் இருபது ரூபாய்க்குப் பஞ்சமில்லை. சில சமயங்களில் முதலியாரின் 'மூடு' நன்றாக இருந்தால் டீ குடிக்க, 'நாஸ்டா' பண்ண என்ற பேரில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா வரும்படியையும் சேர்த்தால் நிச்சயம் மாதம் முப்பது ரூபாய்க்கு மோசமில்லை!

வினாயகமூர்த்தி அந்த அச்சுக்கூடத்தில் 'ஸ்டிக்' பிடித்துக் 'கம்போஸ்' செய்ய ஆரம்பித்தது பன்னிரண்டு வருடங்களுக்கு முந்தி. அவன் முதன்முதலில் செய்த முதல் கம்போஸ் ஒரு கலியாணப் பத்திரிகைதான். அன்று முதல் எத்தனையோ பேருக்கு அவன் கையால் எத்தனையோ விதமான கலியாணப் பத்திரிகைகள் அச்சடித்துக் கொடுத்திருக்கிறான். ஆனால் தனக்கு..?

'எத்தினி பேருக்கு நம்ப கையாலே கலியாண நோட்டிஸ் அடிச்சிக் குடுத்திருக்கோம்... ஹ்ம்...'

இவ்விதம் நினைத்துப் பெருமூச்சு விடும் வினாயகத்துக்கு இப்போது வயது முப்பது ஆகிறது.

'இந்த ஓட்டல்லே போடற ஆறணா சோத்தை எவ்வளவு நாளைக்கு துன்னுகிட்டுக் கெடக்கிறது?...'

வினாயகத்தின் கை 'பிரேக்'கை அழுத்திற்று. 'பெட'லை உதைத்த கால் நின்றது. டிரெடிலின் ஓட்டம் நின்றது...

 அருகிலுள்ள மை டின்கள் வைக்கும் ஸ்டாண்டின் சந்தில் அவன் விரல்கள் எதையோ துழாவின. விரலில் சிக்கிய பொடி மட்டையைப் பிரித்து ஒரு சிமிட்டா பொடியை உறிஞ்சியவுடன், பொடியைத் துடைத்த புறங்கை அவன் மூக்கின் மீது மையைப் பூசியது!

அதைக் கவனிக்காமல் அருகே காயப்போட்டிருக்கும் பத்திரிகைகளில் ஒன்றை அவன் எடுத்துப் பார்த்தான்.

'மய்யிதான் இன்னா ஈவனா சப்ளை ஆயிருக்கு... எதுக்கும் அந்தக் கீழ் ரோலரை மாத்திட்டா 'ஸம்'முனு இருக்கும்... இம்ப்ரஷன் கொஞ்சம் கொறைக்கலாமா?... த்ஸ் உம் பரவாயில்ல... ஐயய்யோ!... இந்த எழுத்து இன்னா படலையே! மொக்கையா, இன்னா எழவு? கொஞ்சம் ஒட்டிக்கினா சரியாப் பூடும்."

இந்தச் சமயத்தில் 'ஏய், இன்னாடா மிசினை நிறுத்திட்டே? அந்த ஆளு இப்ப வந்துடுவான்டா!" என்று முதலியார் குரல் கொடுத்தார்.
"ஒரு நாலணா குடு ஸார்! காத்தாலே நாஸ்டா பண்லே; போயிட்டு வந்து மிச்சத்தைப் போடறேன்..."
"சீக்கிரம் வா. வேலெ நெறைய கெடக்கு!" என்று நாலணாவை எடுத்து மேசைமீது வைத்தார் முதலியார்.
"ஆவட்டும், சார்!"
- இது அவனது வழக்கமான பதில்.
காசை எடுத்துக்கொண்டு டீக்கடைக்கு நடந்தான்

ஒரு நாள் -

பிரஸ்ஸில் வினாயகத்தைத் தவிர வேறு யாருமில்லை.

அன்றைய வேலையில், இரண்டு கலியாணப் பத்திரிகைகளைக் கம்போஸ் செய்து 'புரூப்' போட்டு வைப்பதும், திருத்தி வைத்திருக்கும் வாழ்த்துப் பத்திரத்தைக் 'கரெக்ஷன்' செய்து அச்சேற்ற வேண்டியதுதான் பாக்கி.

'அதுக்கு வேற பேப்பர் வெட்டணும்' என்று முனங்கியபடியே டிரெடிலில் மாட்டியிருந்த 'செஸ்'ஸைக் கழற்றும்போது அவனுக்குத் திடீரென ஓர் ஆசை - சாதாரண ஆசை, சிறுபிள்ளைத்தனமான ஆசை - முளைத்தது.

செஸ்ஸைக் கழற்றி ஸ்டோன் மீது போட்டான் - அதுவும் ஒரு கலியாணப் பத்திரிகைதான் - மேட்டரில் மாப்பிள்ளையின் பெயரை அடுக்கியிருந்த டைப்களைப் பிரஷ்ஷால் துடைத்தான். மை நீங்கிய அச்சுக்கள் பளபளத்தன...

- 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' என்ற எழுத்துக்கள் கண்ணாடியில் பிரதிபலிப்பது போல் இடம் வலம் மாறித் தெரிந்தன.

'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்...'

- 'ஷீட்டிங் ஸ்டிக்'கை ஓரத்தில் நிறுத்தி 'மல்டி'க் கட்டையால் 'மடார் மடார்' என்று இரண்டு போடு போட்டு, வால் கட்டைகளைச் சற்று தளர்த்திய பின் 'பிஞ்ச்ச'ரை எடுத்து, பார்டரை அடுத்திருந்த 'குவாடு'களை அழுத்தி, டைப்புகளை நெம்பி, 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' என்ற பன்னிரண்டு எழுத்துக்களை லாகவமாக வரிசை குலையாமல் தூக்கிக் கேஸ்கட்டை மீது வைத்தான்.

- அவன் உதடுகளில் லேசாக ஒரு குறும்புச் சிரிப்பு நௌிந்தது.

அவன் கைகள் 'பரபர'வென வேறு பன்னிரண்டு எழுத்துக்களைக் கேஸிலிருந்து பொறுக்கி விரலிடுக்கில் நிறுத்தின.

- பயல், சிரஞ்சீவியை சாப்பிட்டுவிட்டான்!

'கி. வினாயகமூர்த்திக்கும்' என்று சேர்த்துப் பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொண்டான்.

- 'சிரஞ்சீவி ஸரீதரனுக்கும்' இருந்த இடத்தில் 'கி. வினாயகமூர்த்திக்கும்' என்ற எழுத்துக்கள் இடம் பெற்றன!

ஸ்டோன் மீது கிடந்த செஸ்ஸை முடுக்கி, இரண்டு முறை தூக்கித் தூக்கித் தட்டிப் பார்த்துவிட்டு டிரடிலில் மாட்டினான். சற்று நேரம் மை இழைத்தபின் 'வேஸ்ட்ஷீட்' ஒன்றை எடுத்து டிரெடிலில் 'பெட்'டின் மீது வைத்துச் சுருக்கம் நீங்குவதற்காக இரண்டு முறை விரலால் தடவி விட்டான்.

காகிதத்தின் சுருக்கம் இல்லாவிட்டால் கூட, பேப்பரை 'பெட்'டின் மீது வைத்ததும் டிரெடிலின் தாளகதிக்கேற்ப அவசரத்தோடு அவசரமாய்க் காகிதத்தை ஒருமுறை தடவிக் கொடுப்பது அவன் வழக்கம்!

அடுத்தாற்போல் இடது கை பிரேக்கை மாற்றியதும் 'டங்... டட்டங்க்' என்ற இம்ப்ரஷன் சப்தம் எழுந்தது.

- 'பெட்'டிலிருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான்.

'கி. வினாயகமூர்த்திக்கும் - சௌபாக்கியவதி அனுசூயாவுக்கும்' என்ற எழுத்துக்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.

பத்திரிகையிலிருந்து பெற்றோர் பெயரோ, ஜாதிப் பட்டமோ அவன் பிரக்ஞையில் இடம் பெறவே இல்லை!

"சரி. கையோட இதை 'டிஸ்ட்ரிபூட்' போட்டுடுவோமே..."

- செஸ்ஸைக் கழற்றித் துடைத்துச் சுத்தம் செய்து, மேட்டரை எடுத்துக் 'காலிப்' பலகையில் வைத்துக் கொண்டு 'டிஸ்டிரிபூட்' போட முனைந்தான்.

"இன்னாடா, நீ பண்ற வேலையே ஏடாகோடமா கீதே. உன்னெ யார்ரா 'டிஸ்டிரிபூட்' போடச் சொன்னாங்க?... நான் இன்னா வேலெ சொல்லிட்டுப் போனேன். நீ இன்னா வேலெ செஞ்சிக்கினு கீறே! அதெ முடிச்சிப்பிட்டு அந்த வாய்த்துப் பத்திரத்தை கரெக்ஷன் செஞ்சி மிஷின்லே ஏத்திக்க. ஆமா, அது அவசரம்!" என்று முதலியார் இரைந்தார்.

"ஆவட்டும், ஸார்" என்று வேலையில் ஆழ்ந்தான் வினாயகம்.
"மணி இன்னா ஆனாலும் சர்த்தான், இன்னிக்கு அத்தெ முடிச்சிடணும்..."
- இது முதலியாரின் உத்தரவு.

மணி மூன்றுக்கு மேலாகி விட்டது. அச்சேற்றி முடித்த கலியாணப் பத்திரிகை மேட்டர் டிஸ்டிரிபூட் போட்டாகி விட்டது. வாழ்த்துப் பத்திர வேலை ஆக வேண்டும்.

கரங்கள் மும்முரமாய் வேலையில் முனைந்திருக்கின்றன; மனம் தனக்கும் ஒரு கலியாணப் பத்திரிக்கை அச்சடிக்கும் 'அந்த நாளி'ல் லயித்திருக்கிறது...

'சூளை அக்கா கையிலே சொன்னா, சொந்தத்திலே ஒரு பொண்ணெப் பாத்து முடிச்சிடும்..."
சூளையில் வினாயகத்தின் ஒன்றுவிட்ட தமக்கை ஒருத்தி இருக்கிறாள்.

ஹீம்... பொண்ணுக்கா பஞ்சம்? பொழப்புக்குத்தான் பஞ்சம்! மொதல்ல ஒரு நூறு ரூபாயாச்சும் வேணும்; அப்புறம் மாசாமாசம் நாற்பது ரூபா வேணாம்?...'

- திடீரென அவனுக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துவிட்டது! சிரித்துவிட்டான்!

"இன்னாடா, பித்துக்குளியாட்டமா நீயே சிரிச்சிக்கிறே" என்றார் முதலியார்.

"நீதான் பாரு ஸார்...!" என்று வாழ்த்துப் பத்திரத்தின் புரூப்பை அவரிடம் காட்டினான் அவன்.

அதைப் பார்த்த முதலியாரும் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்.

'வாழ்வின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள மனிதனுக்கு அவசியம் ஒரு துணை தேவை' என்ற வாசகத்தில் உள்ள 'துணை'யில் 'ணை'க்குப் பதிலாக...

- அச்சுப் பேயின் அந்தக் கூத்தை என்னவென்று சொல்ல?...

தரக்குறைவான இந்த ஹாஸ்யத்தில் கலந்து கொண்டு சிரித்த முதலியாருக்குத் திடீரென, தாம் ஒரு முதலாளி என்பது ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

"சிரிப்பு இன்னடா, சிரிப்பு? காலிப்பயலே! வேலையைப் பாருடா, கய்தே!" என்று அவருடைய 'கௌரவம்' குரல் கொடுத்தது.

"ஆவட்டும், ஸார்!" என்ற அந்தத் தொழிலாளியின் 'சிறுமை' அதற்கு அடங்கிப் பணிந்தது!




இரவு மணி ஏழு!

டிரெடில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் வாழ்த்துப் பத்திரம் 'ஸ்டிரைக்' ஆகி முடியவில்லை. வீட்டுக்குப் புறப்பட்ட முதலியார் வினாயகத்தின் அருகே வந்து நின்று வேலையைக் கவனிக்கிறார். அவன் மேலெல்லாம் வியர்வைத் துளிகள் அரும்பி உதிர்ந்து வழிகின்றன.

'டடக்... டடக்... டடக்.. டடக்..'

கால் 'வதக், வதக்'கெனப் பெடலை உதைக்கிறது. கைகள் பறந்து பறந்து டிரெடிலில் பேப்பரைக் கொடுப்பதும் வாங்குவதுமாக இருக்கின்றன.

'பாவம், மாடு மாதிரி வேலை செய்கிறான்!' என்று மனசில் முனகிக்கொண்டே முதலியார், "இந்தா, இதை ராத்திரி சாப்பாட்டுக்கு வெச்சிக்க... இந்தா சாவி, வரும்போது பூட்டிக்கினு வா... நா போறேன்!" என்று சாவியோடு ஒரு எட்டணா நாணயத்தையும் சேர்த்துக் கொடுத்தார்.

- முதலாளியின் மனசைப் புரிந்து கொள்வதில் வினாயகம் அதி சமர்த்தன்.

"ஸார்...!" என்று பல்லைக் காட்டினான்.

"இன்னாடா, சும்மா சொல்லு!" என்று முதலியார் சிரித்தார்.

"ஞாயித்திக்கெயமை, எங்க அக்கா வூட்டுக்குப் போயிருந்தேன்.. அங்கே ஒரு பொண்ணு இருக்காம்..."

அதற்கு மேல் அவனால் சொல்ல முடியாமற் போனதற்குக் காரணம், விஷயம் பொய் என்பதல்ல - வெட்கம்தான்!

'அடடே, கலியாண சமாச்சாரமா?... அடி சக்கை, நடக்க வேண்டியதுதான்!" என்று முதலியாரும் குதூகலித்தார்.

"அதுக்கு அட்வான்ஸா ஒரு நூறு ரூபா..."

"உம்... உம் - அதுக்கென்னா, பார்ப்போம். நீ மத்த விஷயமெல்லாம் பேசி முடி!" என்று சொன்னதும் வினாயகத்தின் மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை இல்லை.

வௌியில் போகும்போது முதலியார் தமக்குள் சொல்லிக் கொண்டார்!

'பாவம், பயலுக்கு வயசாச்சி - பதினெட்டு வயசிலே நம்மகிட்டே வந்தவன் - நம்மைத் தவிர அவனுக்குத்தான் வேறே யாரு? - ஒரு கலியாணம்னு செஞ்சி வைக்க வேண்டியதுதான்!'

பிரஸ்ஸில் டிரெடில் ஓடிக் கொண்டிருக்கிறது!

'டக் - டக் - டடக் - டடக் -டடக் - '

திடீரென வினாயகத்தின் பெருந்தொடைக்கு மேலே அடி வயிற்றுக்குள்ளே, குடல் சரிந்து கனன்றது போல், குடற் குழாய் அறுந்து தொய்ந்ததுபோல் ஒரு வேதனை...

- "ஆ!" என்று அவன் வாய் பிளந்தது. அவன் கால் டிரெடிலின் பெடலிலிருந்து 'படீ'ரென விலகியது.

கால் விலகிய வேகத்தில், தானே ஓடிய டிரெடிலின் பெடல் 'தடதட'வென அதிர்ந்து ஓய்ந்தது!

வினாயகத்துக்கு மூச்சு அடைத்தது. கேஸ்மீது சாய்ந்து பற்களைக் கடித்தவாறு அடி வயிற்றை அழுத்திப் பிடித்துக் கொண்டான். நெஞ்சில் என்னவோ உருண்டு அடைப்பது போலிருந்தது - மூச்சுவிடவே திணறினான். மெள்ள மெள்ள நகர்ந்து அருகிலிருந்த பானையிலிருந்து ஒரு தம்ளர் தண்ணீர் எடுத்துக் குடித்தான்.

- வலி குறைந்தது; ஆனால், வலித்தது!

'இன்னம் கொஞ்சம்தான்; போட்டு முடிச்சிட்டுப் போயிடலாமே?...'

முக்கி, முனகி,கால்மாற்றி, பெருமூச்செறிந்து, பல்லைக் கடித்தவாறு, நிறுத்தி நிறுத்தி ஒருவாறாக வாழ்த்துப் பத்திரம் பூராவும் அடித்து முடித்து விட்டான்.

டிரெடிலிருந்து செஸ்ஸைக் கழற்றக்கூடப் பொறுமையில்லை...

- கதவை இழுத்துப் பூட்டிக் கொண்டு நடந்தான்.

நடக்க முடியவில்லை; வலி அதிகரித்தது...

வயிற்றில் ஏதோ ஒன்று, இருக்க வேண்டிய இடத்திலிருந்து வேறு எதனுடைய இடத்திற்கோ இடம் மாறி, இடம் பிறழ்ந்து, வேறு எதனுடைய வழியிலோ வந்து அடைத்துக் கொண்டது போல...

"அம்...மா"

- அவனால் வலியைப் பொறுக்க முடியவில்லை.

பக்கத்திலிருந்த டாக்டர் வீட்டுக்கு ஓடிப்போய்... இல்லையில்லை... துடித்துத் துடித்துச் சாடிப்போய் விழுந்தான்.

வினாயகத்திற்கு 'ஹெர்ன்யா'வாம். டாக்டரும் முதலியாரும் சேர்ந்து அவனைச் சர்க்கார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

அவனுடைய உடல், வைத்திய மாணவர்களின் ஆராய்ச்சிப் பொருளாகியது. டாக்டர்கள் அவனைப் பரிசீலிப்பதற்குப் பதிலாகத் தங்கள் புதிய முறைகளை அவன் மீது பிரயோகம் செய்து தங்களுடைய திறமைகளைப் பரிசீலித்துக் கொண்டனர்...

- நோய்... வேதனை... அவமானம்!

நாட்கள் ஓடின. கடைசியில் அவனுக்கு ஒரு சுபயோக சுபதினத்தில் ஆப்ரேஷன் நடந்தது. அதைத் தொடர்ந்து காய்ச்சல் வந்தது. கடைசியில் ஒரு மாதத்துக்குப் பின் ஒருவாறாக அவனுக்கு விடுதலை கிடைத்தது.

ஆஸ்பத்திரியை விட்டு வௌியேறும்போது அவனுக்கு டாக்டர் சொன்ன புத்திமதி அவன் ஹிருதயத்தினுள்ளே சப்தமில்லாமல் ஒரு அதிர்வேட்டை வெடித்தது.

'நீ கல்யாணம் செய்து கொள்ளாதே!.. உனக்கே தோணாது... யாராவது கட்டாயப்படுத்தினாலும்...'

- அவன் காதுகள் அதற்குமேல் எதையும் கிரகிக்கவில்லை!

வினாயகம் மீண்டும் வேலைக்கு வந்து விட்டான். இருண்ட குகை போன்ற அந்தப் பிரஸ்ஸீக்குள் புகுந்து ஒரு மாசமாய்ப் பிரிந்திருந்த டிரெடிலைப் பார்த்தான்; கேஸைப் பார்த்தான்; ஸ்டிக்கைப் பார்த்தான்..

- மனசில் என்ன தோன்றியதோ? - டிரெடிலைக் கட்டிக் கொண்டு பெருமூச்செறிந்தான்...

"அதோ, அந்தக் கலியாணப் பத்திரிகை முடுக்கி வச்சிருக்கு. அதை மிஷின்லே ஏத்திக்கோ. நீ இல்லாம ஒரு வேலையும் நடக்கலேடா!... மத்தப் பசங்க எல்லாம் பிரயோசனமில்லே; ஒனக்கு அடுத்த மாசத்திலேந்து சம்பளத்திலே பத்து ரூவா கூட்டியிருக்கேன். நீ கேட்டியே கலியாணத்துக்குப் பணம் பதினைஞ்சாம் தேதிக்கு மேலே வாங்கிக்க... இன்னடா, சந்தோஷம்தானே?" என்று முதலியார் கண்களைச் சிமிட்டினார்.

அவன் தலையைத் திருப்பிக் கொண்டான். அவனையறியாமல் கைகளிரண்டும் முகத்தைப் புதைத்தன; உடல் குலுங்கிற்று -

அழுதானா?...

"பயலுக்கு ரொம்ப வெக்கம்!" என்று சிரித்தார் முதலியார்.

அவன் மௌனமாக டிரெடிலின் அருகே சென்று யாரோ கம்போஸ் செய்து வைத்திருந்த யாரோ ஒருவருடைய கலியாணப் பத்திரிகையை மனசில் விருப்போ வெறுப்போ சற்றுமின்றி, யந்திரம்போல் மெஷினில் ஏற்றி, காகிதங்களை ஸ்டான்டின்மீது எடுத்து வைத்துக் கொண்டு, மை இழைக்க ஆரம்பித்தான்...

-'டடக்... டடக்...'

அவனது கால் பெடலை மிதித்தது.

'டங்... டட்டங்..!'

- இம்ப்ரஷன்...

அச்சில் வந்தது ஒரு கலியாணப் பத்திரிகைதான்!

மிஷினை நிறுத்திவிட்டு, கேஸ்களுக்கிடையில் செருகி வைத்திருந்த ஒரு காகிதத்தை எடுத்துப் பார்த்தான்...

கி.வினாயகமூர்த்திக்கும் - சௌபாக்கியவதி அனுசூயாவுக்கும்...

- ஆமாம்; அந்த 'வேஸ்ட் ஷீட்' தான்...

அன்று வயிறு குலுங்க அவனைச் சிரிக்க வைத்த அந்த விளையாட்டுப் பத்திரிகைதான்...

அதன் மீது, அவன் கண்களில் ஊற்றுப் போல் சுரந்து கரித்த இரண்டு வெப்பமிக்க கண்ணீர்த்துளிகள் விழுந்து தெறித்தன!..

- "இன்னாடா வினாயகம், மிஷின் நிக்குது... அவன் வந்துடுவானே... அதுக்குள்ளே முடிச்சிடணும்!" என்றார் முதலியார்.

"ஆவட்டும் ஸார்..."

"டடக்... டடக் - டடக்... டடக்..."

- ஆம்; இரண்டு 'டிரெடில்'களும் இயங்க ஆரம்பித்து விட்டன!